மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

திருடன் திருடவும்


திருடன் திருடவும்...

சூது கவ்விய தேசத்தின்
மாலை கவ்வும் நேரம் 
தன்னையும் மண்ணையும் சார்ந்த 
தன்மானக் குடியானதொருவன், 
சந்தையில் வாங்கிய ஆட்டை  
தன் தோளில் தூக்கி
சந்தோசமாய் சென்றான்
தன்  மந்தை நோக்கி ..

மறியைப் பறித்திட 
தீட்டினர் திட்டமொன்றை, 
யோக்கியனென்ற பெயரெடுத்த 
நாலு கடைந்தெடுத்த அயோக்கியர்கள். 

ஒருவன், 
பேரே யோக்கியன் 
தமிழ் தேசியமென 
தம்பட்டம் அடிக்கும் தகர சாமான். 

மற்றவன், 
மகா யோக்கியன் 
மய்யத்தில் நானென்பான் 
எவன் எக்கேடு கெட்டிடினும் 
எப்பக்கமுமில்லை,  நான் மையமென்பான். 

மூன்றாமவன், 
தீவிர யோக்கியன் 
ஆன்மீகப் புயலெனும் 
அமுங்கனிக் கள்ளன்.

அடுத்தவன், 
அதி தீவிர யோக்கியன். 
வளர்ச்சியென்பான் மலருமென்பான் 
வயசுக்கு வராத மொட்டைக்கூட 
கசக்கியெறியும் கள்ளவழி பிறந்த 
தேசபக்த காமுகன். 

நால்வரும் கண்டனர் மறியை 
கால்பங்கு ஆளாளுக்கு, காலோடு சேர்த்து
தனித்தனி செல்வதென முடிவு 
எத்தனித்தனர் எச்சில் ஊற

நாயை சுமப்பதேன் தம்பி.. 
வழிமறித்துக் கேட்டான்
முதலாம் யோக்கியன்,
முன்னோரின் ஓலையின்படி 
முப்பாட்டன் வழி  சொந்தம் 
நான் உன்னுடைய 
அண்ணனென்ற  அறிமுகத்தோடு!.
ஆட்டு மறியை   நாயென விளிக்கும் 
அதிசயப்  பயித்தியமா  நீ 
வழியை விடு என்றவாறே 
வழியைத்  தொடர்ந்தான் - ஆனால் 
அணுவளவு கீறல் அவனுள்ளத்தில் 

சற்று தூரம் கழிய 
மற்ற யோக்கியன் வந்தான், 
மய்யம் என்றவாறே !
பன்றியின் நிறம் கருப்பு - ஆனால் 
கறுப்பெல்லாம் கறுப்பல்லவென்று 
கரகரத்தான் கருஞ்சட்டையோடு ! 
கடுப்படிக்காதே விசயத்தைச்சொல் 
என வீரம் செறிக்க கேட்டவனிடம் 
அறமன்று பன்றியை சுமப்பது 
என்றவாறே ட்வீட்டவும் செய்தான் !!

சிறுகீறல் இப்போது 
சிக்கலாய் விரிந்தது !! 
விறுவிறுவென விற்றவுடன் 
கிளம்பிய வியாபாரியின்  பிம்பம் 
கண்திரையில் சிரித்தது !!
சந்தேகப்பட்டது சரிதானோ 
இல்லை இல்லை இது ஆடுதான் என்றான்
அடிமனதில் ஆட்டத்தை அடக்கிக்கொண்டு.

மூன்றாமவன் வந்தான் 
முப்பது முழ தூரம் கழித்து. 
வாயே தொறக்காதவன், 
வாயைப் பிளந்தான் ஆன்மீக வாடையோடு 
தோளை பார்த்து கத்தினான் 
இமயமலை மீது சத்தியம் 
நிச்சயம் நீ சுமப்பது பாம்பென்று !!

அடிமனதின் ஆட்டம் இப்போ உதறலாய் !!
என்னாச்சு உங்களுக்கென்று 
சில நாழிகை முன் கேட்டவன் 
என்ன நடந்தது எனக்கென்று 
தன்னைக் கேட்டான் சிந்தனையில் !!

கடைசியில் நின்றான் அதிதீவிர யோக்கியன். 
கல்லெறிக்குத் தப்பிய கள்வன் போல,
கத்தினான் கையால் பொத்தியபடி 
காவிப் பற்கள் தெரியாதபடி !!
இந்துவல்லவோ நீ 
அவன் பிணத்தை சுமப்பானேன் 
அசுத்தத்தை சுமக்காதேடா அம்பி !!

உதறல் உள்ளத்துக்குள் ஊக்கமாய் கொதித்தது
உளறல் எனலாம் ஒருவனென்றால்... 
அத்தனை பேரும் பொய்யாகுமோ?
மறியல்ல இது வேறெதுவோ..!! 
இறக்கிவிட்டு  ஓடினான்
தான் வந்த வழி தெறித்தபடி 
தன் நிலை நொந்தபடி 

நால்வரும் கூடினர் 
நாற் பங்காகியது மறி  
அறிந்து கொள் தமிழா 
விழித்துக் கொள் !!

ஆட்டைத் தொலைத்த 
அப்பாவியோடு போகட்டும்,
நாட்டைத் தொலைத்துவிடாதே !

அக்கறையன்று அவர் குரல் !!!
அடித்துச் சொல்கிறேன், 
திருடன் திருடவும் 
கொல்லவும்  அழிக்கவுமேயன்றி 
வேறொன்றுக்கும் வரான்...!!!

4 கருத்துகள்:

 1. அருமை நண்பரே அற்புதமான ஒப்பீடுகளோடு கள்ளக்கூட்டத்தின் தோலை உறித்துக் காட்டியது அழகு.

  தொடர்ந்து இப்படி அரசியல் நையாண்டி இசைத்திடுங்கள் - கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 2. அருமை நண்பரே.. எச்சரிக்கை பல செய்தும் ஏமாளி தமிழர்கள் நாட்டையும் தொலைத்துவிட்டார்கள் த்மிழ்நாட்டையும் தெலைப்பார்கள் வெகு விரைவில்..................

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!! உங்கள் ஆதங்கம் புரிகிறது.. தற்போதுள்ள நிலை நிச்சயம் மாறும் என நம்புவோம்.

   நீக்கு

Receive update by Email

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...